தலச்சிறப்பு |
ஒரு சமயம் சிபிச்சக்கரவர்த்தி இங்கு தனது பரிவாரங்களுடன் தங்கியிருந்தபோது, ஒரு வெள்ளைப் பன்றியைக் கண்டான். அதைத் துரத்திக் கொண்டு செல்ல, அது ஒரு புற்றில் சென்று மறைந்தது. வியப்புற்ற அரசனிடம் அங்கு வந்த மார்க்கண்டேய முனிவர், புற்றுக்கு பாலால் திருமஞ்சனம் செய்யும்படி கூறினார். சிபிச்சக்கரவர்த்தியும் அவ்வாறே செய்ய, பகவான் இருவருக்கும் காட்சி தந்த தலம். அதனால் இத்தலத்திற்கு 'ஸ்வேதபுரி' என்ற பெயரும் உண்டு.
மூலவர் புண்டரீகாக்ஷன், செந்தாமரைக் கண்ணன் என்ற திருநாமங்களுடன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'செண்பகவல்லி' என்றும் 'பங்கயச்செல்வி' என்றும் வணங்கப்படுகின்றார். லக்ஷ்மி, பூதேவி, பெரிய திருவடி, பிரம்மா, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலில் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என்னும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று பெருமாளை ஸேவிக்க வேண்டும்.
இக்கோயிலுக்குள் திவ்ய புஷ்கரணி, கந்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி, குச புஷ்கரணி, சக்ர புஷ்கரணி, புஷ்கல புஷ்கரணி, பத்ம புஷ்கரணி, வராஹ புஷ்கரணி, மணிகர்ணிகா புஷ்கரணி என்னும் 7 தீர்த்தங்கள் உள்ளன.
பெரியாழ்வார் 11 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|